வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் ராஜா எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
சங்கரன்கோவிலில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை- ராஜா எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தையால் பிரச்சினை முடிந்தது
- கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் புதிய நிறுவனத்திடம் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
- ஊதியம் வழங்க வலியுறுத்தி 2 நாட்களாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி யில் கடந்த பல ஆண்டுகளாக தூய்மை பணிகளுக்காக தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் பழைய ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டு புதிய நிறுவனத்திடம் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் 30 வார்டுகளில் குப்பைகளை மட்டுமே அள்ளிவிட்டு வாறுகால் அள்ள நகராட்சி பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் தூய்மை பணிகளுக்கு முறையாக பணியாளர்களை நியமிக்காமல் நகரில் பல பகுதிகளில் குப்பைகள் சேர்ந்து வந்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்தநிலையில் அந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு ஜூன் மாதம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் ஊதியம் வழங்க வலியுறுத்தி 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, தாசில்தார் பாபு ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடம் பேசி ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். ராஜா எம்.எல்.ஏ. தலையிட்டு தூய்மை பணியாளர்கள் பிரச்சினையை முடித்ததால் இனி சங்கரன்கோவில் நகரில் தூய்மை பணிகள் தங்கு தடை இன்றி நடக்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.