உள்ளூர் செய்திகள்

உரிமமின்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை

Published On 2023-06-01 10:11 GMT   |   Update On 2023-06-01 10:11 GMT
  • கழிவுநீர் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
  • பொது இடங்களில் கழிவுநீரை கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

தஞ்சை மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் நச்சுத்தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தலின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தில் அனைத்துவித பாதுகாப்பு இன்சூரன்சு, விபத்து காப்பீடு, பணியாளர் மருத்துவசான்றிதழ், ஓட்டுனர் உரிமம் பயன்பாட்டில் உள்ளவாறு அரசுவிதி களின்படி புதுப்பித்திருக்க வேண்டும்.மாநகராட்சி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன விவரத்தினை இம்மாநகராட்சியில் கண்டிப்பாக பதிவுசெய்து மாநகராட்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டுக்கு ஒருமுறை பதிவுசெய்து தேவையான ஆவணங்களுடன் ரூ.2000 செலுத்தி அதனை வாகனத்தின் முகப்பில் ஒட்டி இருக்க வேண்டும்.

கழிவுநீரை மாநகராட்சிக்கு சொந்தமான மாரிகுளம் நீருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று அகற்றிட்டு உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செல்லாமல் நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் கழிவுநீரை கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கழிவுநீர் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதால் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தாமல் நவீனரக கழிவுநீர் வாகனங்கள் மூலமாக சுத்தம் செய்ய வேண்டும். கட்டிடங்களில் கழிவுநீர் தொட்டி நிறைந்திருந்தாலும் உடனடியாக அவற்றை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் ஏதேனும் அசாதாரணமான விபத்துகள் நிகழ்ந்தால் அதற்கு அந்த கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு ஆகும். அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

தவிர அதற்கான நஷ்ட ஈடு இழப்புகள் அனைத்தும் கட்டிட உரிமையாளர்களிடமிருந்தே பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News