உள்ளூர் செய்திகள்

அளவு குறைவாக பொட்டலமிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2023-02-14 13:07 IST   |   Update On 2023-02-14 13:07:00 IST
  • திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
  • புகார் பெறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திருப்பூர் :

தொழிலாளர் துறையில் நுகர்வோர் நலன் பாதுகாப்பு கருதி திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள், உணவு நிறுவன உரிமையாளர்கள், வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், ஜவுளி நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சட்டமுறை எடையளவு சட்டத்–தின் கீழ் ரேஷன் கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அளவு குறைவு தொடர்பாக கூறப்பட்ட புகார்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பொட்டலங்களில் அறிவிக்க வேண்டிய தயாரிப்பாளர் முழு முகவரி, பொருளின் பெயர், தயாரிப்பு மாதம், வருடம், எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ஆகியவை குறிக்கப்படாத பொட்டலப்பொருட்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது.

தெருவோரம், நடைபாதைகளில் உள்ள கடைகள், சந்தைகள் ஆகிய இடங்களில் முத்திரையிடப்படாத எடையளவுகள் பறிமுதல் செய்வது குறித்தும் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அரிசி ஆலைகளில் பொட்டலமிடப்படும் பொட்டலங்களில் அளவு குறைவாக இருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அவ்வாறு அளவு குறைவாக பொட்டலமிடும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நுகர்வோர் அமைப்புகளிடம் இருந்து புகார் பெறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News