உள்ளூர் செய்திகள்

கடன் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊட்டி தாட்கோ கணக்காளருக்கு 5 ஆண்டு சிறை

Published On 2022-07-19 16:01 IST   |   Update On 2022-07-19 16:01:00 IST
  • உடந்தையாக இருந்த புரோக்கருக்கும் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
  • வாடகை கார் வாங்குவதற்காக கடன் வழங்க கோரி விண்ணப்பித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் புரிய மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் சுய தொழில் புாியும் இளைஞா்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மஞ்சூர் அருகே காத்தாடிமட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வாடகை கார் வாங்குவதற்காக கடன் வழங்க கோரி ஊட்டியில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது அதற்கு கடன் வழங்க கணக்காளர் பிரபாகரன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று புரோக்கர் செல்வராஜ் மூலம் கேட்டதாக தெரிகிறது.

ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சுரேஷ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை சுரேசிடம் கொடுத்து அனுப்பினர். அவர் கணக்காளர் பிரபாகரனிடம் லஞ்சம் கொடுத்தபோது, அங்கு ரகசியமாக கண்காணித்த போலீசார் கையும், களவுமாக பிரபாகரன், செல்வராஜ் 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. கடன் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ கணக்காளர் பிரபாகரனுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த புரோக்கர் செல்வராஜூக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். பின்னர் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News