கண்டெய்னர் யார்டில் விபத்தில் பாதிக்கப்பட்டவர் நஷ்டஈடு கேட்டு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்- லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
- கடந்த வருடம் ஜூன் மாதம் கம்பெனியில் வாகனம் மோதி காலில் அடிபட்டு சிகிச்சை பெற்றார்.
- கிராம மக்கள் ஒன்று திரண்டு கம்பெனிக்கு வரும் கண்டெய்னர் லாரிகளை சிறை பிடித்து யார்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் கம்மார் பாளையத்தில் கண்டெய்னர் யார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு காட்டுப்பள்ளி, சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் மூலம் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த கண்டெய்னர் யார்டில் நாலூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் (44) லோடு மேன் ஆக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் கம்பெனியில் வாகனம் மோதி காலில் அடிபட்டு சிகிச்சை பெற்றார். இதனால் சில மாதங்களாக அதே கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கம்பெனி நிர்வாகத்திடம் குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த முடிய வில்லை என்று கூறி சம்பள உயர்வு, பணி நிரந்தரம், நஷ்டஈடு, காப்பீடுத் தொகை, கேட்டு கம்பெனியில் விஷம் குடித்து மயக்கம் அடைந்தார். அவரை மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு கம்பெனிக்கு வரும் கண்டெய்னர் லாரிகளை சிறை பிடித்து யார்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதாக தெரிவித்ததின் பேரில் போராட்டம் கைவிடபட்டது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.