உள்ளூர் செய்திகள்

 கொலை செய்யப்பட்ட விஜயாவை காணலாம்.                    கொலையாளி மோகன்.

பெண் டெய்லரை அடித்து கொலை செய்து நாடகமாடிய தொழிலாளி கைது- போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

Published On 2025-08-19 11:45 IST   |   Update On 2025-08-19 11:45:00 IST
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
  • விஜயாவின் கணவருடன் வேலை பார்த்து வந்த மோகன் கடைசியாக விஜயா வீட்டுக்கு சென்றதும் பின்னர் அவசரமாக வெளியேறியதும் கேமராவில் பதிவாகி இருந்தது.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 4-வது வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயா (38). வீட்டிலேயே துணி தைத்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

வெல்டிங் தொழிலாளியான நாகராஜ் பவானி காவல் நிலைய குடியிருப்பு எதிரில் உள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதே பட்டறையில் பவானி பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (50) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் விஜயா வீட்டில் தனியாக இருந்தார். மதியம் அவரது கணவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் பட்டறைக்கு சென்று விட்டார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் தனது துணியை தைக்க கொடுப்பதற்காக விஜயா வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் விஜயா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயா தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் இறந்தது தெரிய வந்தது.

மேலும் அவர் காதில் அணிந்திருந்த தங்க சங்கிலி துண்டு துண்டாக சிதறி கிடந்தது. அருகில் கிரைண்டர் குழவி மிளகாய் பொடி பொட்டலம் மற்றும் அரிவாள்மனை கிடந்தது. அதே நேரம் வீட்டில் உள்ள நகை பணம் எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் இந்த கொலை பணம் நகைக்காக நடைபெறவில்லை என போலீசார் உறுதிப்படுத்தினர். மோப்பநாய் காவிரி வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவி பிடிக்கவில்லை.

பவானி டி.எஸ்.பி ரத்தின குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். விஜயா வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் விஜயாவின் கணவருடன் பட்டறையில் வேலை பார்த்து வந்த மோகன் (50) கடைசியாக விஜயா வீட்டுக்கு மாலை 3 மணிக்கு சென்றதும் பின்னர் 3.30 மணிக்கு அவர் அவசரமாக வெளியேறியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதனை அடுத்து போலீசார் உஷார் ஆகி பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மோகன் விஜயாவை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீஸ் விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசார் கூறும் போது,

மோகன் விஜயாவின் கணவர் நாகராஜ் வேலை பார்க்கும் பட்டறையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். விஜயா வீட்டில் துணிகளை தைத்து வந்துள்ளார். அப்போது மோகன் தனது மனைவியின் துணிகளை தைப்பதற்காக விஜயா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதைப்போல் நேற்று மதியமும் சாப்பிட்டு வருவதாக நாகராஜிடம் கூறி விட்டு விஜயா வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விஜயா ஆத்திரத்தில் மோகன் மீது மிளகாய் பொடியை வீசு உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மோகன் விஜயாவை தலையில் கல்லால் தாக்கி உள்ளார். மேலும் அருவாள்மனையால் அவரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்ய போது மோகன் சட்டையில் இரத்த கறை படிந்தது. பின்னர் மோகன் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கால்வாயில் சென்று சட்டையை அலசி விட்டு பின்னர் மீண்டும் பட்டறைக்கு வந்து ஒன்றும் தெரியாது போல் வேலை பார்த்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் என்ன காரணத்துக்காக மோகன் விஜயாவை கொலை செய்தார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் முழுவிவரம் தெரிய வரும் என்றனர். 

Tags:    

Similar News