உள்ளூர் செய்திகள்

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு- உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

Published On 2025-08-12 11:03 IST   |   Update On 2025-08-12 11:03:00 IST
  • காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
  • கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சூடசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்லப்பா (60) விவசாயி. இவருக்கு சிக்கம்மா என்ற மனைவியும் 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

வீட்டில் 2 மாடுகளை வளர்த்து வந்த இவர், இன்று அதிகாலை வழக்கம் போல் மாட்டு கொட்ட கையில் வேலை செய்த போது ஒற்றைக் காட்டு யானை கல்லப்பாவை துரத்தி சென்று தாக்கியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் அறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தளி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

கல்லப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூடசந்திரம், ஆச்சு பாலம், கீசனகுப்பம், சத்திரம் தொட்டி, நெல்லு மாறு, அவேறுபள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், காட்டு யானைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இந்த பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி அச்சுறுத்தியும் வருகிறது.

காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News