புதிய ஊராட்சி செயலக கட்டிடம் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
கொங்குபட்டி புதிய ஊராட்சி செயலக கட்டிடத்தை அதிகாரிகள் குழு ஆய்வு
- கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் ஒரே வளாகத்தில் வரும்படி கிராம ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு
- புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கொங்குபட்டியில் தமிழக அரசு சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் ஒரே வளாகத்தில் வரும்படி கிராம ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஏற்கனவே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்த இடத்தில் 2 அலுவலகங்களும் கட்ட போதுமான இட வசதி இல்லாததால், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொங்குபட்டியில் இருந்து பெரியக்கொம்பானுர் செல்லும் வழியில் கோனையன் கரடு என்ற இடத்தில் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கொங்குபட்டி பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும், அதே இடத்தில் கட்ட வேண்டும் எனவும், இடம் பற்றாக்குறை என்றால் அப்பகுதியைச் சேர்ந்த தேன்மொழி மற்றும் சாரங்கபாணி ஆகியோர் தங்கள் நிலத்தை தானமாக தருவதாக தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பொதுமக்கள் சென்று வர போக்குவரத்து குறைவான கரடு பகுதி. பெண்கள் தனியாக அலுவலகம் சென்று வர முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். மேலும் கடந்த 9-ந் தேதி தாலுகா அலுவலகத்தில் குடியுரிமை ஒப்படைப்பு போராட்டமும் நடத்தினர்.
உயர் மட்ட குழு ஆய்வு
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், மீண்டும் உயர் மட்ட குழு அமைத்து இடத்தை ஆய்வு செய்து குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய கட்டிடம் கட்டுவது எனமுடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தணிக்கை ராமஜெயம், காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ள இடம், பொதுமக்கள் தானமாக கொடுப்பதாக கூறிய இடம், தற்போது ஊராட்சி செயலக கட்டிடம் பணி நடைபெறும் இடம், அந்த இடங்களில் இருந்து மற்ற கிராமங்களுக்கு உள்ள தூரம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு ஊராட்சி செயலக கட்டிடம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.