உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா

Published On 2022-07-12 09:31 GMT   |   Update On 2022-07-12 09:31 GMT
  • கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தர்ணாவில் ஈடுபட்டாா்.
  • அங்கு வந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.

நாமக்கல்:

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில், நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ஏ.கே.பி.சின்ராஜ். நேற்று காலை நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தர்ணாவில் ஈடுபட்டாா்.

அங்கு வந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அதற்கு சின்ராஜ் எம்.பி. மறுத்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதியம் 1 மணிக்கு மீண்டும் கலெக்டர் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, 'சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டம், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கூட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தலாம், பல்வேறு காரணங்களால் கடந்த மாதங்களில் நடத்த முடியாமல் போனது என்று தெரிவித்தாா். இதனை ஏற்றுக் கொண்ட மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தனது போராட்டத்தைக் கைவிட்டாா்.

அதன்பிறகு சின்ராஜ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், சாலைப் பாதுகாப்பு, மின்வாரிய கணக்குக் குழுக் கூட்டம், ஆண்டில் 4 முறை நடத்தப்பட வேண்டும். இதற்கு தலைவராக நான் உள்ளேன். மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பணிகள் நடைபெறும். இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக மாவட்ட கலெக்டருக்கு பலமுறை கடிதம் அனுப்பினேன். ஆனால், அவரிடம் இருந்து உரிய பதில் வரவில்லை.

அமைச்சரானாலும், மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினரானாலும் இக்கூட்டத்தில் சாதாரண உறுப்பினா்கள் தான். காலதாமதத்தைக் கண்டித்துதான் போராட்டத்தில் ஈடுபட்டேன். தற்போது சாலை பாதுகாப்பு, வளா்ச்சிக் குழு கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் நடத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளாா். மின் கணக்குக் குழு புதிய உறுப்பினா்கள் நியமனத்திற்குப் பின் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

ஊரக வளா்ச்சித் துறையில் நிறைவுற்ற பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கால்நடைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. அரசு விழாக்களில் முன்னுரிமை அளிக்காமல் என்னை அவமதிக்கும் வகையில் கலெக்டர் நடந்து கொள்கிறாா். இனிமேல் அதுபோன்ற தவறுகள் நிகழாது என தற்போது கலெக்டர் உறுதியளித்திருக்கிறாா்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News