உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்க ஜல்லி கற்களுக்கு பதில் பெரிய கற்களை கொட்டியிருப்பதை படத்தில் காணலாம்.

கடையம் அருகே தரமான சாலை அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-08-22 13:41 IST   |   Update On 2023-08-22 13:41:00 IST
  • சாலை அமைப்பதற்காக தெருவில் ஒருபுறம் வாறுகால் கட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.
  • சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்பவர்கள் அவதியடைகின்றனர்.

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியம் பாப்பான்குளம் அருகே உள்ள மயிலப்பபுரம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் அருகில் இருக்கும் மற்றொரு கிராமமான மலையான்குளம் கிராமத்திற்கும் இடையே உள்ள ஒரு தெருவில் மணல் சாலையாக காணப்பட்ட நிலையில் அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெருவில் சாலை அமைப்பதற்காக ஒருபுறம் வாறுகால் கட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது சாலை அமைக்க, சிறியரக கற்களை அதாவது ஜல்லிகளை கொட்டாமல், கிணறுகளில் வெட்டி எடுக்கக்கூடிய பெரிய அளவிலான கற்களை கொட்டி சாலையை அமைக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சாலை பலமாக இருக்காது என கருதிய அப்பகுதியினர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது சாலை போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், சாலைப்பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்பவர்கள் அவதியடைகின்றனர். மேலும் தரமான முறையில் இந்த சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News