உள்ளூர் செய்திகள்

சென்ட்ரல் அருகில் சாலையை கடந்து செல்ல நகரும் படிக்கட்டு வசதியுடன் புதிய சுரங்கப்பாதை தயார்

Published On 2023-06-17 08:08 GMT   |   Update On 2023-06-17 08:08 GMT
  • பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர்.
  • புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

சென்னை:

சென்னை சென்ட்ரல் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல நகரும் படிக்கட்டு வசதியுடன் புதிய சுரங்கப் பாதை விரைவில் திறக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில் வாகன நெரிசல் தினமும் அதிகரித்து வருகிறது. இதன் அருகில் அமைந்து உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் சார்பில் நடந்தது.

இந்த புதிய சுரங்கப் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன.பொதுமக்கள் சுரங்க நடைபாதையில் எளிதில் செல்ல நகரும்படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சுரங்கப்பாதை வழியாக பொது மக்கள் சாலையை கடந்து மறுபுறம் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எளிதில் செல்லலாம். இதற்காக புதிய சுரங்கப் பாதையின் நுழைவு வாயில் அருகே இரு புறமும் 2 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுரங்கப்பாதையின் சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் அழகிய இயற்கை காட்சி ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

இந்த புதிய சுரங்க நடை பாதையால் பொதுமக்கள் நீண்ட நேரம் அங்குள்ள சிக்னல் பகுதியில் காத்திருப்பது தவிர்க்கப்பட உள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த நவீன சுரங்க நடைபாதையை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News