திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை ஓட்டம்
- திருமண வாழ்கையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என கடிதம் எழுதி வைத்து உள்ளார்
- ராஜாராம் மனைவி புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை செய்தனர்
கோவை.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 29). ஐடி ஊழியர். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜாராம் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
ஆனால், மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் மாயமாவதற்கு முன்பு கம்பெனியில் உள்ள நோட்டில் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
அதில் "திருமண வாழ்கையை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை. இதன் காரணமாக நான் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்." இவ்வாறு அதில் எழுதியிருந்தார். இதுகுறித்து ராஜாராமின் மனைவி போத்தனூர் போலீசில் தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான புது மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.