உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற நபர்

Published On 2022-08-22 10:17 GMT   |   Update On 2022-08-22 10:17 GMT
  • மக்கள் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.
  • 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றார்.

கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை கலெக்டரை நேரில் சந்தித்து அளித்தனர். இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒலிபெருக்கியுடன் கலெக்டர் அலுவலக த்துக்குள் நுழைய முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஒலிபெருக்கியை பறித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் வேடப்பட்டி சத்யா நகரை சேர்ந்த ஜெகநாதன்(வயது55) என்பதும், ஆடு மேய்க்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

அவர் தனது வீட்டில் 15 ஆடுகளை வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடுகளில் 5 ஆடுகளை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 பேர்விஷம் வைத்து கொன்றனர்.

இதுகுறித்து ஜெகநாதன் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனக்கு இழப்பீடு வழங்க கோரி 2019-ம் ஆண்டு முதல் பல தடவை மனு அளித்தும் இழப்பீடு வழங்காததால் தனது கோரிக்கை கலெக்டருக்கு கேட்கும் வகையில் ஒலிபெருக்கியுடன் வந்ததாக தெரிவித்தார்.

Tags:    

Similar News