கீழ்கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
- புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்து தோட்டத்தில் நடமாடியது.
- வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டு, காயம் அடைந்த தொழிலாளியை மீட்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பங்களாபடிகையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55).
இவர் சம்பவத்தன்று, அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் பலாப்பழம் பறிக்கும் பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்து தோட்டத்தில் நடமாடியது.
இதனை பார்த்ததும் செல்வராஜ் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் யானை துரத்தி சென்று அவரை தாக்கியது. இதில் கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது யானை நின்றதால் அச்சமடைந்த மக்கள், யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டதுடன், வனத்துறையினருக்கும் தகவல் ெகாடுத்தனர்.
வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டு, காயம் அடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.