உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

Published On 2023-03-15 09:56 GMT   |   Update On 2023-03-15 09:56 GMT
  • தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ந்தேதி மாசிநாயக் கன்பட்டியில் நடைபெற்றது.

சேலம்:

தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ந்தேதி மாசிநாயக் கன்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்,மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

அதனைத்தொடர்ந்து, தற்போது 2-ம் கட்டமாக சேலம் மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி காலை 10 மணிக்கு தலைவாசல், பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் "சமத்துவம் தமிழென்று சங்கே முழங்கு" என்ற தலைப்பில் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., "கவிதைப் பெண்கள்" என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News