உள்ளூர் செய்திகள்

காட்டுத்தீ பற்றி எரிவதை படத்தில் காணலாம்

மூலக்கரைப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் விடிய விடிய பற்றி எரிந்த தீ

Published On 2022-10-09 14:55 IST   |   Update On 2022-10-09 14:55:00 IST
  • நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது.
  • நாங்குநேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

நெல்லை:

நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிபட்டி செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

திடீர் தீ

இந்த பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது. அப்போது காற்று வீசியதால் காய்ந்து கிடந்த சறுகுகளில் தீப்பற்றி மளமளவென பரவியது.

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மூலக்கரைப்பட்டி போலீசாரும் விரைந்து வந்தனர்.

கட்டுக்குள் வந்தது

ஆனால் காட்டுத்தீ நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவி வந்ததால் திசையன்விளையில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வண்டியுடன் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் விடிய விடிய பற்றி எரிந்த தீயை இன்று அதிகாலை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 8 மணி அளவில் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

Tags:    

Similar News