உள்ளூர் செய்திகள்

கோவையில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியது

Published On 2023-06-16 09:18 GMT   |   Update On 2023-06-16 09:18 GMT
  • கோவையில் 3 பகுதிகளில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
  • தெருநாய்கள் தொடர்பாக செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

கோவை,

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் கருத்தடை ஆபரேஷன் மற்றும் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இன்று காலை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் ஆதரவற்ற தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி இன்று தொடங்கி, வருகிற 30-ந்தேதி வரை நடக்க உள்ளது.

கோவையில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் பிராணிமித்ரன், ஹியூமன் அனிமல் சொசைட்டி ஆகிய 2 தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

கோவை கிழக்கு, தெற்கு, மத்திய மண்டலங்களில் பிராணி மித்ரன் அமைப்பும், மேற்கு, வடக்கு மண்டலங்களில் ஹியூமன் அனிமல் சொசைட்டி அமைப்பும் தெருநாய்களை கட்டுப்படுத்தி வருகிறது. இதற்காக மேற்கண்ட 2 அமைப்புகளுக்கும் நாய் பிடிக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கோவை சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் ஆகிய பகுதிகளில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. எனவே கோவை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் தொடர்பாக 9944434706, 9366127215 ஆகிய செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இதுதவிர மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமும் புகார் தரலாம். கோவை மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Tags:    

Similar News