உள்ளூர் செய்திகள்

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் தடாகம் சாலை

Published On 2023-07-05 14:33 IST   |   Update On 2023-07-05 14:33:00 IST
  • சாலை முழுவதும் புழுதி பறந்த வண்ணம் உள்ளது.
  • ரோட்டில் படிந்து கிடக்கும் புழுதியால் விபத்துகள் ஏற்படுகிறது.

குனியமுத்தூர்,

கோவை தடாகம் சாலையில் ஏராளமான பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் அங்கு எந்த நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. அதிலும் குறிப்பாக வேலண்டிபாளையம், கோவில்மேடு, இடையார்பாளையம், டி.வி.எஸ் நகர், கணுவாய், தடாகம், அனுவாவி சுப்பிரமணியன் கோவில், ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டி உள்ளது.

இந்த நிலையில் கோவை தடாகம் சாலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அங்கு ஒரு வருடத்திற்கு முன்பு வெங்கட்டாபுரம் முதல் கே.என்.ஜி.புதூர் வரை சாலை விரிவாக்க பணி நடப்பதாக இருந்தது.

எனவே மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனாலும் அங்கு உடனடியாக வேலை தொடங்கப்படவில்லை. அதே நேரத்தில் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை வசதிக்காக, அந்த சாலை மாறி மாறி தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது.

எனவே அந்த ரோட்டில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் தற்போது சாலை முழுவதும் புழுதி பறந்த வண்ணம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆடி மாதம் பிறந்து விட்டால் காற்றடிக்கும் காலம் தொடங்கி விடும். எனவே அங்கு மேலும் அதிகமாக புழுதி கிளம்பும். இதற்கிடையே அங்கு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவ்வப்போது கண்களை கசக்கி கொண்டுதான் செல்ல வேண்டி உள்ளது.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ மாணவிகளின் சீருடையில் தூசி படிந்து காணப்படுகிறது. எனவே அவர்கள் தினமும் துணிகளை துவைத்து, பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ரோட்டில் படிந்து கிடக்கும் புழுதி காரணமாக சிறு சிறு விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கோவை-தடாகம் இடையே தார் சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News