உள்ளூர் செய்திகள்

விழாவில் தானியங்கி எந்திரம் மூலம் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சபை பெறுவதை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பார்வையிட்டு மஞ்சபைகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் 10 நாட்கள் நடந்த கண்காட்சி

Published On 2023-01-24 09:26 GMT   |   Update On 2023-01-24 09:26 GMT
  • கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, புத்தக கண்காட்சி உள்ளிட்டவை நடந்தது.
  • உரிய விளக்கமும், விண்ணப்பக்கும் முறையும் அலுவலர்கள் விளக்கமாக கூறி உள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 'ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகள் தாங்கி' என்கிற நிகழ்ச்சி நடந்தது. இதில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, புத்தக கண்காட்சி உள்ளிட்டவை நடந்தது.

இதன் நிறைவு விழா நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில், சிறப்பாக அரங்குகள் அமைத்த அனைத்து துறைகளுக்கும் கேடயங்களை வழங்கி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பேசியதாவது:-

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி கடந்த 14-ந் தேதி தொடங்கி, 10 நாட்கள் நடந்தது. இதில், அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ரூ.10-க்கு மஞ்சபை வழங்கும் எந்திரம் குறித்து செயல்விளக்கம், அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக கண்காட்சியும், தொலைநோக்கியுடன் கூடிய வான் நோக்குதல் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதே போல், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெறுதல், சுயத்தொழில் தொடங்குதல் குறித்த விளக்கப்பட்டது. உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கண்காட்சிக்கு வந்திருந்தவர்களுக்கு உரிய விளக்கமும், விண்ணப்பக்கும் முறையும் அலுவலர்கள் விளக்கமாக கூறி உள்ளனர்.

10 நாட்கள் நடந்த கண்காட்சியை நாள்தோறும் 2 ஆயிரம் பேர் வீதம், மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகம்மது அஸ்லாம், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மகளிர் மேம்பாட்டு உதவி திட்ட அலுவலர் யோகலட்சுமி, தாசில்தார் சம்பத், உதவி இயக்குனர் (வேளாண்மை) சுரேஷ், தலைமையாசிரியர் மகேந்திரன், அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் திரிவேணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News