வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய 6 பேர் கைது
- கிரிஷ் தனக்கு தங்கை முறையுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
- மனமுடைந்த கிரிஷ், அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சி போலுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் கிரிஷ் (18). 9-ஆம் வகுப்பு படித்துள்ள இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூல் மில்லில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். இதனிடையே, கிரிஷ் தனக்கு தங்கை முறையுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (17ம் தேதி) இரவு அந்த சிறுமி, கிரிஷை தேடி அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை, அண்ணன் சிவகுமார், கணேசன், சந்திரன் ஆகியோர், கிரிஷ் வீட்டிற்கு சென்று இருவரையும் அடித்துள்ளனர். பின்னர் சிறுமியை விட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் மனமுடைந்த கிரிஷ், அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், நேற்று அவரது சடலத்தை கைப்பற்றி, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கிரிஷின் தாய் பசம்மா(34), தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தை, அவரது அண்ணன் சிவகுமார், கணேசன், சந்திரன், வீரபத்திரன், சரவணன் உள்பட 6 பேரை கைது செய்து ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.