உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே குட்டியுடன் முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்

Published On 2023-03-09 09:13 GMT   |   Update On 2023-03-09 09:13 GMT
  • வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
  • வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.

சமவெளி பகுதிகளில் தற்போது மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வறட்சி வனப்பகுதியை விட்டு வைக்காததால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நீலகிரி மாவட்ட வன எல்லைக்கு படையெடுக்க தொடங்கிய உள்ளன. இவைகள் மேட்டுப்பாளையம், குன்னூர் சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதி வழியாக இடம்பெயர்ந்து வருகின்றன.

இவ்வாறு இடம்பெயர்ந்த குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு இருந்த முட்டைகோஸ்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துயது. இதனை விரட்டும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அடிக்கடி இடம்பெயர்ந்து வருகின்றன. தற்போது குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் 5 யானைகள் முகாமிட்டு உள்ளது. அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது. எனவே இரவு நேரத்தில் ஒற்றையடி பாதையில் பொதுமக்கள் யாரும் நடந்து செல்ல வேண்டாம். மேலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News