உள்ளூர் செய்திகள்

சிறுமுகையில் மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

Published On 2023-08-01 15:03 IST   |   Update On 2023-08-01 15:03:00 IST
  • சிறுமுகை இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
  • சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன்.

இவரது மனைவி சின்னம்மாள்(வயது67). இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 3 பேர் நுழைந்தனர்.

அவர்கள் வந்த வேகத்தில் மூதாட்டியின் தலையில் இரும்பு ராடால் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சின்னம்மாள் அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சின்னம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் சிறுமுகை இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் இவர் இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வருவதால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு யார்? யாரெல்லாம் வந்து சென்றனர் என்ற தகவல்களை சேகரித்தனர்.

இதில் சிறுமுகை பாரதி நகரை சேர்ந்த சர்மா(21), மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்த முகமது அம்ரித்(21), சிறுமுகை ஜிவா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் தான் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த சிறுமுகை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினர்.

Tags:    

Similar News