உள்ளூர் செய்திகள்

கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கவிதா.

41 வயது பெண்ணுக்கு ஆதார் அட்டையில் 123 வயது என்று அச்சடிப்பு

Published On 2023-02-28 01:57 GMT   |   Update On 2023-02-28 01:57 GMT
  • ஆதார் அட்டையில் வயதை மாற்றக்கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன்.
  • எந்த ஒரு நலத்திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்கமுடியவில்லை.

திருச்சி :

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி தாயனூரை சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (வயது 41) ஒரு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது வாக்காளர் அடையாள அட்டையில் 3.5.1982 என்று பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ரேஷன் கார்டில் 41 வயது என்று உள்ளது. ஆனால் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 1900 என்று ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின்படி எனக்கு 123 வயது. தற்போது ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்து ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிலும் எனது வயது மாறுகிறது.

ஆதார் அட்டையில் வயதை மாற்றக்கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன். ஆனால் மாற்ற முடியவில்லை. இதனால் பல இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எந்த ஒரு நலத்திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்கமுடியவில்லை.

இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் நிலவி வருகிறது. எனவே, எனது வயதை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News