உள்ளூர் செய்திகள்

திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களையும், அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

புவனகிரி அருகே பூட்டிய வீட்டில் 15 பவுன் நகை திருடிய 4 வாலிபர்கள் கைது: வாகன சோதனையின் போது சிக்கினர்

Published On 2023-10-24 09:13 GMT   |   Update On 2023-10-24 09:13 GMT
  • புவனகிரியை அடுத்த முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த விஜயகுமார் (35) என்பதும் தெரியவந்தது.
  • பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பெருமாத்தூரில் வசிப்பவர் முகமது பெரேஷ் (வயது 34). இவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக முகமது பெரேஷ் வீட்டை பூட்டிக்கொண்டு புதுவையிலேயே தங்கியுள்ளார். இதனை நோட்டம் விட்ட மர்மநபர்கள், கடந்த 18-ந்தேதி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, 350 கிராம் வெள்ளி கொலுசு, ஒரு சிலிண்டரை திருடிச் சென்றனர். இது தொடர்பாக புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கீழ் புவனகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 22), உளுந்தூர்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (36), அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (37), புவனகிரியை அடுத்த முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த விஜயகுமார் (35) என்பதும் தெரியவந்தது.

மேலும், இதில் ஆனந்தராஜ், மருதுபாண்டி ஆகியோர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையதும் போலீ சாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் புவனகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பெருமாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகை மற்றும் சிலிண்டர் ஆகியவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News