உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய 4 பெண்கள் கைது

Published On 2024-11-26 12:56 IST   |   Update On 2024-11-26 12:56:00 IST
  • உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
  • ரூ.17,710 திருடியதும் தெரியவந்தது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதிக்கு மேல் கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

இந்நிலையில் நேற்று சங்கரநாராயண சுவாமி கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் 4 பேர் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து புறக்காவல் நிலைய போலீசார், சந்தேகத்திற்கு இடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மகளிர் காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் மகேஸ்வரி (வயது 42) என்பது போலீசாரை மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

அவருடன் சிக்கியவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ. மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், 4 பேரும் ஒன்றாக இணைந்து உண்டியல் பணம் எண்ணும் போது ரூ.17 ஆயிரத்து 710-ஐ திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் உண்டியல் பணம் திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் மற்றும் 3 பெண்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News