உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட விக்னேஷ், சின்னவர், சதீஷ், விஜயகுமார்.

டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட மோதல் இரும்பு வியாபாரி கொலை வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-11-02 05:43 GMT   |   Update On 2022-11-02 05:43 GMT
  • முதியவர் தன்னை தாக்கி விட்டார் என்ற ஆத்திரத்தில் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.
  • மதுவால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் தெற்கு மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 60). பழைய இரும்புகளை சேகரிக்கும் வியாபாரி. இவருடைய மனைவி கலையரசி (56). இவர்களுக்கு கனகராஜ் என்ற மகனும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 27-ந் தேதி சின்னத்துரையை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை வழக்கில் வக்கம்பட்டியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (34), பித்தளைப்பட்டியைச் சேர்ந்த சின்னவர் (34), மைக்கேல்பட்டியைச் சேர்ந்த சதீஸ் (24), பெருமாள்கோவில் பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

கும்மம்பட்டி கிராமத்தில் பதுங்கி இருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முக்கிய குற்றவாளியான தாமரைக்கண்ணன் (30), கோவை கோர்ட்டில் சரணடைந்தார்.

திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சம்பவத்தன்று பாரில் மது அருந்திக் கொண்டு இருந்தபோது சின்னத்துரைக்கும், தாமரைக்கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சின்னத்துரையை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரையும், தாமரைக்கண்ணனை தாக்கினார். முதியவர் தன்னை தாக்கி விட்டார் என்ற ஆத்திரத்தில் தனது நண்பர்களான விஜயகுமார், சின்னவர், விக்னேஷ், சதீஸ் ஆகியோருக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.

அவர்கள் சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரது மனைவி கண் முன்னே சின்னத்துரையை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

மதுவால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News