நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ேபசிய காட்சி.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 3,500 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்
- கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்தும் 500 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 32 நபர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி (வேப்பனப்பள்ளி), டி.ராமச்சந்திரன் (தளி), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் (ஊத்தங்கரை), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாடா எலக்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் விவேகானந்தா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் நீடித்து பயனளிக்கும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
பெண்களுக்கு உரிய அதிகாரம் அளித்தல் அடிப்படையில் டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் 90 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு, ஒரு மாநிலம், ஒரு சமுதாயம் முன்னேற வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது.
அதேப்போல பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொழில் சாலைகள் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனம் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தி பணியாணைகளை வழங்கி வருகிறது. மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறுவனம் ஏற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இதுவரை இந்த நிறுவனத்தில் 9 ஆயிரம் நபர்கள் வேலை பெற்றுள்ளார்கள்.
அவற்றில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்தும் 500 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.