உள்ளூர் செய்திகள்

மது பாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்.

தஞ்சாவூரில் வாகனத்தில் 2400 மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேர் கைது

Published On 2023-02-06 09:37 GMT   |   Update On 2023-02-06 09:37 GMT
  • மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையிட்டனர்.
  • சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை போலீசார் வழி மறித்தனர்.

தஞ்சாவூா்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு பொலிரோ வேனை போலீசார் வழி மறித்தனர்.

இதனைப்பார்த்த அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

அதில் 2400 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வாகனத்தில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நிரவி குமரன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி (வயது 22), காரைக்கால் இலத்தியூர் முதலியார் தெருவை சேர்ந்த ஜெயபால் (40), மேல பொன்னேரி மேட்டுத் தெருவை சேர்ந்த ராஜப்பா (32) ஆகிய 3 பேர் என்பதும், காரைக்கால் நிரவி பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த போலி மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகணபதி, ஜெயபால், ராஜப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 2400 மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் காரைக்கால் பகுதி போலீசாரிடம் தகவல் தெரிவித்து அங்கு உள்ள போலி மதுபான ஆலையம் மூட வைத்தனர்.

தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News