உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வேடசந்தூரில் தனியார் பஸ்சை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது

Published On 2023-10-16 07:50 GMT   |   Update On 2023-10-16 07:50 GMT
  • வேடசந்தூர் வந்ததும் கண்டக்டர் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.
  • அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்டக்டர் மீது மோதுவது போல வந்தனர்.

வேடசந்தூர்:

ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை ஆயக்குடியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக சாமியார் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (29) என்பவர் இருந்தார். வேடசந்தூர் வந்ததும் கண்டக்டர் செல்வராஜ் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் செல்வராஜ் மீது மோதுவது போல வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர் சுதாரித்து நகர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் ஆட்டோ டிரைவருக்கும், செல்வராஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அந்த கும்பல் செல்வராஜை கடுமையாக தாக்கி விட்டு சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஒரு கும்பல் அந்த தனியார் பஸ்சை வழி மறித்து தாக்கினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழ இறங்கினார். இந்த தாக்குதலில் பஸ்சின் பக்க வாட்டு கண்ணாடிகள் உடைந்த நிலையில் 3 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காளனம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவீன்பாரதி (20), வேடசந்தூரைச் சேர்ந்த விக்ரம் (21). டி.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கருணாகரன் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News