கிருஷ்ணகிரி ஓட்டல் கடையில் புகுந்து ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது
- பயங்கர ஆயுதங்களுடன் அந்த ஓட்டலுக்கு வரதராஜன் உள்ளிட்ட 3 பேரும் வந்துள்ளனர்.
- ஓட்டல் ஊழியர்கள் சுரேஷ், குமார் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி பிரதான சாலையில் பிரபலமான ஓட்டல் உள்ளது.
கடந்த 21-ந்தேதி இந்த ஓட்டலுக்கு அருகேயுள்ள வெங்கடாசலம் என்பவரது வீட்டின் முன்பு வரதராஜன் (எ ) ராஜா (வயது 55), நவீன்குமார் (25), விக்ரம் (எ) அப்பு (22) ஆகியோர் தாங்கள் வந்த காரை நிறுத்தியுள்ளனர்.
இதனை வெங்கடாச்சலம் எதற்காக எனது வீட்டின் முன்பு காரை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டபோது காரில் வந்த வரதராஜன் உள்ளிட்ட 3 பேரும் வெங்கடாச்சலத்தை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வெங்கடாச்சலம் கே.ஆர்.பி.டேம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பயங்கர ஆயுதங்களுடன் அந்த ஓட்டலுக்கு வரதராஜன் உள்ளிட்ட 3 பேரும் வந்துள்ளனர்.
தங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் மேலாளர் முத்துராஜிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதை தடுக்க வந்த ஓட்டல் ஊழியர்கள் சுரேஷ், குமார் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.காயமடைந்த 2 பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஓட்டல் மேலாளர் கட்டியானப்பள்ளியை சேர்ந்த முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி.டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜன், நவீன்குமார், விக்ரம் 3 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.