உள்ளூர் செய்திகள்
கோவையில் ஓட்டல் - சிக்கன் கடையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு
13, 14 வயதுடைய குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
கோவை:
கோவை அடுத்த மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் தொண்டாமுத்தூர் நரசீபுரம் ரோட்டில் உள்ள ஒரு சிக்கன் கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர்.
இதுகுறித்து கோவை கலெக்டர் அலுவலக தேசிய குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் குறிப்பிட்ட கடைகளுக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது மலுமிச்சம்பட்டியில் உள்ள ஓட்டல், மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள சிக்கன் கடையில் வேலை பார்த்து வந்த 13, 14 வயதுடைய குழந்தை தொழிலாளர்கள் 2 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
இதுகுறித்து அந்தந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய ஓட்டல் கடை உரிமையாளர் செட்டிபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுதாகரன், மற்றும் தொண்டாமுத்தூர் பாண்டியன் வீதியை சேர்ந்த அப்துல் சமீது(48) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.