உள்ளூர் செய்திகள்
விவசாயியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
பொள்ளாச்சி அடுத்த மலையாண்டி பட்டினம் கொட்டூர் உள்ளாஸ் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 40). விவசாயி.
இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கோட்டூர் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றார்.
பின்னர் அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார்.
ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.
சம்பவத்தன்று போலீசார் கோட்டூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.
இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பிரபுவின் மோட்டார் சைக்கிள் என்பதும், அவர்கள் சிவகங்கையை சேர்ந்த ராஜபாண்டியன் (29) மற்றும் அவரது நண்பர் சேவகமூர்த்தி (20) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.