உள்ளூர் செய்திகள்
தேர்வு

யூ.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு எழுத 8,420 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்

Published On 2022-06-03 14:34 IST   |   Update On 2022-06-03 14:34:00 IST
மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் யூ.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு எழுத 8,420 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட கலெக்டர்அனீஷ் சேகர் தலைமையில் நாளை மறுநாள் (5-ந் தேதி) அன்று நடைபெறவுள்ள குடிமைப் பணி முதன்மைத் தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

இந்தியக் குடிமைப் பணி என்பது மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள அரசுப்பணிகளை மேலாண்மை செய்யும் முக்கிய பணியாகும். பெரும்பாலான இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அரசின் உயர் பதவிகளில் பணியாற்றிட வேண்டும் என்பதை இலட்சிமாக கொண்டு தேர்விற்காக கடுமையாக தங்களை தயார் செய்கின்றனர். 

இத்தேர்வானது முதன்மைத் தேர்வு, ஆளுமைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும். அதன்படி, குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரை என இரண்டு அமர்வுகளாக  குடிமைப் பணி முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. 

 மதுரை மாவட்டத்தில் இத்தேர்விற்காக கண்பார்வை மாற்றுத்திறன் கொண்ட 28 நபர்கள் உட்பட மொத்தம் 8,420 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு பணிகளுக்காக 17 பகுதிகளில்  21 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு துணை கலெக்டர்நிலை அலுவலர் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

தேர்வில் முறைகேடு ஏதும் ஏற்படாமல் கண்காணித்திட 21 வட்டாட்சியர் நிலை அலுவலர்களும், 21 துணை வட்டாட்சியர் நிலை என 42 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு நடைபெறும் மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, இத்தேர்வினை சுமூகமான முறையில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாறன் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News