உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் குவைத், சார்ஜா, டாக்கா விமான பயணிகளுக்கு குரங்கு அம்மை சோதனை

Published On 2022-06-03 05:05 GMT   |   Update On 2022-06-03 05:05 GMT
தமிழக சுகாதாரத்துறை சென்னை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை:

தென்ஆப்பிரிக்காவில் உருவான குரங்கு அம்மை நோய் மேற்கத்திய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது.

குவைத், சார்ஜா, டாக்கா ஆகிய நாடுகளிலும் தற்போது பரவத் தொடங்கியதால் இந்திய சுகாதாரத்துறை விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

உலக அளவில் இதுவரையில் 500 பேருக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவிலும் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை சென்னை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்கள்.

குறிப்பாக சார்ஜா, குவைத், டாக்கா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிரமாக காய்ச்சல், கொப்பளம் ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்கிறார்கள். மருத்துவ குழுவினர் பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. ஆனாலும் அதற்கான அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா? என்று சோதனை செய்யப்படுகிறது. காச்சல் இருந்தாலே சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு குரங்கு அம்மைக்கான பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News