உள்ளூர் செய்திகள்
மெக்கானிக் உடலை 1½ மாதமாக மீட்க போராடும் குடும்பத்தினர்

வெளிநாட்டில் கார் விபத்தில் பலி: மெக்கானிக் உடலை 1½ மாதமாக மீட்க போராடும் குடும்பத்தினர்

Published On 2022-06-02 11:19 GMT   |   Update On 2022-06-02 11:19 GMT
எபின் மரணமடைந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இரணியல்:

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் இலுப்பையடிகாலனி பகுதியை சேர்ந்தவர் எபின் (வயது51). இவர் சவுதிஅரேபியா ரியாத்தில் உள்ள அல்கசாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தொழிற்பேட்டை வளாகத்திற்குள் எதிர்பாராத விதமாக நடந்த கார் விபத்தில் எபின் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஏப்ரல் 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் எபின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டி அவரது மனைவி புனிதாபாய் (47) ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகத்திற்கும் மனுக்கள் அனுப்பி உள்ளார். அதில், விபத்தில் மரணமடைந்த தனது கணவர் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

எபின் மரணமடைந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதனிடையே அவரது 2 மகன்களும் தந்தையை இழந்த சோகத்திற்கிடையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதியுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் எபின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News