உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா ஆட்சியில் மெகா ஊழல் ஏ.வி.சுப்பிரமணியன் புகார்
பா.ஜனதா ஆட்சியில் மெகா ஊழல் நடந்திருப்பதாக ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டில் 54 சதவீதம், ரூ.500 நோட்டில் 108 சதவீதம் கள்ள நோட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2016-ல் கருப்பு பணத்தை ஒழிப்பதாகக்கூறி கொண்டுவந்த திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருந்த சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது எவ்வழக்கும் இல்லை என விடுவித்துள்ளனர்.
இதேபோல சென்னையில் பணியாற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் என்பவர் ஸ்டாக் எக்சேஞ் தகவல்களை கசியவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் மெகா ஊழல் நடந்துள்ளது.
ரபேல் விமானம் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளோம். கடந்த 8 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் ஏற்கனவே ரூ.54 லட்சம் கோடி கடன் பல மடங்காக உயர்ந்துள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகின்றனர். தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பொதுத்துறைகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது பா.ஜனதா வுக்கு மீண்டும் ஆட்சிக்கு வருவோமா? என்ற பயம் வந்துள்ளது. எனவே மத துவேசத்தை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற நினைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.