உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி - விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-06-01 10:25 GMT   |   Update On 2022-06-01 10:25 GMT
மத்திய அரசு தென்னை சாகுபடிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியும் பயனுள்ள முறையில் செலவழிக்கப்படும்

மடத்துக்குளம்:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை உற்பத்தியை ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை வெகுவாக குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட கால பயிராக தென்னை பராமரிக்கப்படுவதால் உடனடியாக மாற்றுச்சாகுபடிக்கும் செல்ல முடியாது. எனவே இத்தகைய விலை வீழ்ச்சி காலங்களில் நிலைமையை சமாளிக்க மாற்று வழிகளை அனைத்து தரப்பினரும் யோசிக்கத்துவங்கிஉள்ளனர்.

அவ்வகையில் தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் விவசாயிகளிடம் ஆர்வம் உள்ளது. ஆனால் போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.

இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:- தேங்காய் விலை வீழ்ச்சியால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். இச்சூழ்நிலையை சமாளிக்க, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வழிகாட்டுதல் வழங்குகின்றனர். ஆனால் அனைத்து விதமான பயிற்சிகளும் கேரளா ஆலுவாவிலுள்ள பயிற்சி மையத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் அங்கு சென்று தங்கி பயிற்சி பெற தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிபுணர்களைக்கொண்டு திருமூர்த்திமலை தென்னை நாற்றுப்பண்ணை அல்லது உடுமலையில் இத்தகைய பயிற்சிகளை வழங்க வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள். மத்திய அரசு தென்னை சாகுபடிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியும் பயனுள்ள முறையில் செலவழிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News