உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்திய காட்சிகள்.

வேலூர் அண்ணாசாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2022-06-01 10:25 GMT   |   Update On 2022-06-01 10:25 GMT
வேலூர் அண்ணாசாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.
வேலூர்:

வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 

பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடை வைக்க அனுமதி பெற்ற வியாபாரிகள் பலர் அண்ணா சாலை மற்றும் அண்ணா பஜார் பகுதியில் தள்ளுவண்டிகளில் சாலையோரம் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இன்று காலை வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி தலைமையில் இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வேலூர் பழைய மீன் மார்க்கெட் முன்பு அண்ணா சாலை மற்றும் அண்ணா பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளை பறிமுதல் செய்தனர்.

இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் பழங்கள் விற்பனை ஆவதில்லை இதனால் நஷ்டம் ஏற்படுகிறது.

சாலையில் எந்தவித இடையூறும் இல்லாமல் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறோம். அதிகாரிகள் எங்களது தள்ளுவண்டி கடைகளை பறிமுதல் செய்யக் கூடாது என அவர்கள் கூறினர். 

மேலும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலை ஓரம் வந்து வியாபாரம் செய்ய கூடாது. பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் மட்டும் வியாபாரம் செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News