உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதிய பஸ் நிலையம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-06-01 11:05 IST   |   Update On 2022-06-01 11:07:00 IST
இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை
 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய  பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். 

இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான   பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது. யாருக்கும் பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்கவேண்டியும், அனைத்து  கட்சியினர், உள்ளூர் அனைத்து ஜமாத்தார்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடந்தது. 

இதில்  பங்கேற்ற பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா, செயலாளர் துருக்கி ரபீக்ராஜா ஆகியோர் தலைமையில் இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் கூடி அங்கிருந்து  கோஷங்கள் எழுப்பியபடி பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். 

அதன்பின்  பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டும், புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.  போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து   வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

இதுகுறித்து மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா கூறுகையில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி யாருக்கும் பயன்தராத வகையில் இளையான்குடியில் ஊருக்கு வெளியே 4 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யவும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 

விரைவில் தேதி அறிவிக்காமலேயே  சென்னையில்   தலை மை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பஸ் நிலைய பிரசனைக்கு தீர்வு கிடைக்கும்வரை   போராட்டம் தொடரும் என்றார்.
Tags:    

Similar News