உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று புதைத்த இடத்தில் வாழைகன்றுகள் நட்ட மனைவி
கடலூர் அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது செய்த போலீசார் கள்ளக்காதலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென மாயமானார். இதுபற்றி விஜயலட்சுமி போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள உறவினர்கள் விஜயலட்சுமியிடம் உனது கணவர் எங்கே என்று கேட்டதற்கு வெளியூர் சென்றுள்ளார் என பதில் கூறினார்.
இதுபற்றி குழந்தைகளும் அப்பா எங்கே என விஜயலட்சுமியிடம் அடிக்கடி கேட்டபோது, அவர் வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை குழந்தைகளும் நம்பி உள்ளனர்.
இதனிடையே ராஜசேகர் கொன்று புதைக்கப்பட்டதாக அந்த பகுதியில் பரவலாக தகவல் பரவியது. இது நடுவீரப்பட்டு போலீசாருக்கும் தெரியவரவே தகவல் அறிந்த போலீசார் எஸ்.புதுக்குப்பம் கிராமத்துக்கு விரைந்தனர். அப்போது விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.
உடனே விஜயலட்சுமியை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். போலீசாரின் பிடி இருகியதால் விஜயலட்சுமி கள்ளக்காதலன் மோகன் என்பவருடன் சேர்ந்து தனது கணவரை கொன்று புதைத்ததாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
உடனே போலீசார் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்ததும் கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து ராஜசேகரை கொன்று புதைத்த இடத்தை ஆட்கள் மூலம் தோண்டினர். அந்த இடம் கடினமான செம்மண் பகுதியாகும். எனவே தோண்டுவதற்கு சிரமம் ஏற்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தோண்டப்பட்டது. சுமார் 8 அடி ஆழத்தில் ராஜசேகரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த பணி நேற்று மாலை 5 மணிக்கு முடிந்தது. உடனே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசில் விஜயலட்சுமி கொடுத்துள்ள வாக்குமூலம் விபரம் வருமாறு:-
எனது கணவர் ராஜசேகர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்வார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனிடையே எங்களது கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இந்த விவகாரம் எனது கணவர் ராஜசேகருக்கு தெரியவந்தது. அவர் என்னை கண்டித்ததோடு கள்ளக்காதலன் மோகனுடன் பேசக்கூடாது என எச்சரித்தார்.
இந்த விபரத்தை மோகனிடம் தெரிவித்தேன். உடனே அவரும் நானும் சேர்ந்து எனது கணவர் ராஜசேகரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று எனது கணவர் ராஜசேகரை அடித்து கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்தோம்.
கொன்று புதைத்த இடம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அந்த இடத்தில் வாழை மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தோம். எனது கணவரின் உடல் வாழை மரத்துக்கு உரமாகியது. இதனால் துர்நாற்றம் வீசவில்லை. எனவே எந்தவித சந்தேகமும் யாருக்கும் ஏற்படவில்லை.
உறவினர்கள் சந்தேகத்தின்படி போலீசில் தெரிவித்ததால் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
தலைமறைவான கள்ளக்காதலன் மோகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.