உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2022-05-31 14:58 IST   |   Update On 2022-05-31 14:58:00 IST
மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள்” 

மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டு 22 மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க ரூ.101.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக் கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்பு கூட்டும் எந்திர சேவை மையங்கள் விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.

வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், 

நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவற்றில் விவசாயக் குழுக்கள் தங்களுக்கு எந்த வகை எந்திரங்கள் எவ்வளவு எண்கள் 

தேவையோ அவற்றினை மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கி, மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. 

மானிய விலையில் மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை புதுக்கோட்டை  மற்றும் அறந்தாங்கி அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், 

வேளாண்மை பொறியியல் துறை,  புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 221816 அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News