உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சுற்றுலா பயணிகளை கவர திருமூர்த்திமலையில் கோடை விழா நடத்தப்படுமா?

Published On 2022-05-31 13:29 IST   |   Update On 2022-05-31 13:29:00 IST
கொரோனா ஊரடங்கு திரும்ப பெறப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணை பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்கோடை விடுமுறை காலத்தில் இங்கு வந்து செல்கின்றனர்.

இயற்கை எழில் பொங்கும் திருமூர்த்திமலையில், சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லை. படகு சவாரி பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.

பஞ்சலிங்க அருவி பகுதியில் கழிப்பிட வசதி இல்லை. திருமூர்த்தி அணை கரையில், பூங்கா அமைக்கும் திட்டமும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதே போல் அமராவதி அணை பூங்காவும் பொலிவிழந்து பரிதாப நிலையில் உள்ளது.

புதர் மண்டிக்கிடக்கும் அணைப்பூங்காவை பார்த்து விட்டு, சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்த இரு சுற்றுலா தலங்களும் மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறையினரும், பல முறை அறிவிப்பு மட்டும் வெளியிட்டு வருகின்றனர். சுற்றுலா வர்த்தகத்தை மட்டும் நம்பியுள்ள அப்பகுதியினர், வாழ்வாதாரத்துக்காக மாற்றுத்தொழிலுக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அதிகளவு ஈர்க்கவும், நீர்நிலைகள், வனம்,  மேற்குத்தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோடை விழா போன்ற சிறப்பு விழாக்களை நடத்த நீண்ட காலமாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருமூர்த்திமலையில், ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அரங்கு அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவும் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

கொரோனா ஊரடங்கு திரும்ப பெறப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். எனவே தற்போதைய கோடை விடுமுறை சீசனில் திருமூர்த்திமலையில், அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கோடை விழா நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் பொலிவிழந்து காணப்படும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தலாம்; உள்ளூர் மக்களும் பயன்பெறுவார்கள். எனவே சுற்றுலா பயணிகளை கவரும் கண்காட்சி உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி கோடை விழா நடத்த வேண்டும் என உடுமலை பகுதி மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Tags:    

Similar News