என் மலர்
நீங்கள் தேடியது "திருமூர்த்தி மலை"
- கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
- கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை வழிபாடு செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
உடுமலை, நவ.15-
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் வழியாக நீர்வரத்தை வழங்கி வருகிறது.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து காணப்பட்டது.இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மாலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீரென பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அருவியில் தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் கடந்த 11-ந்தேதி முதல் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தை ஜாலியாக பொழுதை கொண்டாட திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா வந்த பயணிகள் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு, ஆர்ப்பரித்தவாறு, மலையின் அடிவார பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சுற்றிலும் தழுவியவாறு திருமூர்த்தி அணையை வந்தடைந்தது.
அதைத் தொடர்ந்து கோவில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. நேற்று காலை அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் ஆவலோடு திருமூர்த்தி மலைக்கு வந்தனர். ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை வழிபாடு செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு நீரில் இருந்து பாதுகாக்க கோவில் உண்டியல்களை பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டப்பட்டது. மேலும் அருவிக்கு வந்துள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதே போன்று உடுமலை, தளி, அமராவதி பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் சீற்றம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணை பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்கோடை விடுமுறை காலத்தில் இங்கு வந்து செல்கின்றனர்.
இயற்கை எழில் பொங்கும் திருமூர்த்திமலையில், சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லை. படகு சவாரி பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.
பஞ்சலிங்க அருவி பகுதியில் கழிப்பிட வசதி இல்லை. திருமூர்த்தி அணை கரையில், பூங்கா அமைக்கும் திட்டமும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதே போல் அமராவதி அணை பூங்காவும் பொலிவிழந்து பரிதாப நிலையில் உள்ளது.
புதர் மண்டிக்கிடக்கும் அணைப்பூங்காவை பார்த்து விட்டு, சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்த இரு சுற்றுலா தலங்களும் மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறையினரும், பல முறை அறிவிப்பு மட்டும் வெளியிட்டு வருகின்றனர். சுற்றுலா வர்த்தகத்தை மட்டும் நம்பியுள்ள அப்பகுதியினர், வாழ்வாதாரத்துக்காக மாற்றுத்தொழிலுக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அதிகளவு ஈர்க்கவும், நீர்நிலைகள், வனம், மேற்குத்தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோடை விழா போன்ற சிறப்பு விழாக்களை நடத்த நீண்ட காலமாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருமூர்த்திமலையில், ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அரங்கு அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவும் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
கொரோனா ஊரடங்கு திரும்ப பெறப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். எனவே தற்போதைய கோடை விடுமுறை சீசனில் திருமூர்த்திமலையில், அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கோடை விழா நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் பொலிவிழந்து காணப்படும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தலாம்; உள்ளூர் மக்களும் பயன்பெறுவார்கள். எனவே சுற்றுலா பயணிகளை கவரும் கண்காட்சி உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி கோடை விழா நடத்த வேண்டும் என உடுமலை பகுதி மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.






