உள்ளூர் செய்திகள்
நுங்கு வண்டி பந்தயம்

ஆலய திருவிழாவில் நுங்கு வண்டி பந்தயம்- ஆர்வமுடன் பங்கேற்ற சிறுவர்-சிறுமிகள்

Published On 2022-05-30 06:00 GMT   |   Update On 2022-05-30 06:00 GMT
சிவகங்கை அருகே திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நுங்கு வண்டி போட்டியில் சிறுவர்-சிறுமிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சிவகங்கை:

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களில் நுங்கு வண்டி பந்தயமும் ஒன்று. இது கிராம சிறுவர்-சிறுமிகளின் முக்கிய விளையாட்டாக இருந்து வந்தது. காலப்போக்கில் நுங்கு வண்டிகள் தயார் செய்வது நின்று போய்விட்டது.

தற்போது மறைந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பனங்குடி கிராமத்தில் நடைபெற்ற புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவில் நுங்கு வண்டி பந்தயம் இடம் பெற்றது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நுங்கு வண்டி போட்டியில் சிறுவர்-சிறுமிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நுங்கு வண்டி மற்றும் டயர் வண்டி பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் பந்தய எல்லையாகவும், பெண்கள் பிரிவிற்கு 50 மீட்டா் பந்தயம் எல்லையாகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் 11 சிறுவர்களும், பெண்கள் பிரிவில் 10 சிறுமிகளும் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்கள்களும் கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இதில் முதல் 3 இடங்களை பெற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு தலா ரூ.1000, ரூ.500 மற்றும் ரூ.300 பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
Tags:    

Similar News