உள்ளூர் செய்திகள்
அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

பல்லடம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

Published On 2022-05-29 08:52 GMT   |   Update On 2022-05-29 08:52 GMT
பல்லடம் அருகே வரும்பொழுது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை . இன்று காலை தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வேலப்ப கவுண்டம்பாளையத்தில் வசிக்கும் கார்த்திகேயன்- கலைவாணி தம்பதியினருக்கு தர்சனா (வயது 10) என்ற மகள் உள்ளார்.இந்த நிலையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கார்த்திகேயன் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி அன்று காரில் சென்றபோது பெரம்பலூர் அருகே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தர்சனாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கார்த்திகேயன் குடும்பத்தார், நீண்ட தொலைவு சென்று வருவதற்கு சிரமமாக இருந்ததால், கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்து நேற்று முன் தினம் பெரம்பலூரில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பல்லடம் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பல்லடம் அருகே வரும்பொழுது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பெரம்பலூர் சென்று ஆவணங்களை கொண்டு வந்து நேற்று மாலை சமர்ப்பித்துள்ளனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் வேலை நேரம் முடிந்து விட்டது.

 மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை . இன்று காலை தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி சிறுமியின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  இன்று விரைவாக பரிசோதனை முடித்து தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

இதையடுத்து சமாதானம் அடைந்த சிறுமியின் பெற்றோர் ,உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News