உள்ளூர் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்டு கைதானவர்கள்.

ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2022-05-29 13:51 IST   |   Update On 2022-05-29 13:51:00 IST
ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினர் மற்றும் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்.
மதுரை

சிவகங்கை மாவட்டம் பாசியாபுரம், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் நேற்று காலை மஸ்தான்பட்டி, மந்தை திடல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவரை 2 பேர்  வழிமறித்து, கத்திமுனையில் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றனர்.

இதே போல் பசுமலை விநாயகர் நகர் இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் ராகவன் (53). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்  கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

மேலும் பாலாஜி நகரைச் சேர்ந்த துரைராஜ் (66) என்பவர் நேற்று மதியம் தேவி நகர் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர் கத்திமுனையில் துரைராஜ் வைத்திருந்த ரூ.1, 150 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

மதுரை மாநகரில் ஒரே நாளில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர துணை கமிஷனர்கள் தங்கதுரை, ராஜசேகரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அனுராதா (அண்ணா நகர்), ரவீந்திரன் (திருப்பரங்குன்றம்)  ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

அவர்கள் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி, அவற்றில் இடம் பெற்று இருந்த காட்சி தொகுப்புகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது மேற்கண்ட 3 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அப்போது திருப்பரங்குன்றத்தில் பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து  போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். 

இதில் அவர்கள் பழைய குயவர் பாளையத்தை சேர்ந்த மாரிச்செல்வம் (28), மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, குட்டை ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News