உள்ளூர் செய்திகள்
நாகை அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓட்டல் மீது மணல் லாரி மோதியதில் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி படுகாயம் அடைந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் காரப்பிடாகை தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கடை பகுதியில் ஓட்டல் மற்றும் டீக்கடை செயல்பட்டு வருகிறது. கடை உரிமையாளர் கார்த்திகேயன் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடத்தில் இருந்து ஆற்று மணல் ஏற்றி வந்துக் கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது.
இதில் கடையில் டீ மற்றும் உணவு அருந்திக் கொண்டிருந்த
10-க்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்நிலையில் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற வேளாண் துறை அலுவலர் சிவசண்முகம் பலத்த காயமடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடதுபுறமாக சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் உள்ள கடையில் புகுந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.