உள்ளூர் செய்திகள்
கருணாநிதி

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை நாளை திறப்பு

Published On 2022-05-27 09:41 GMT   |   Update On 2022-05-27 09:41 GMT
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் நாளை (28-ந்தேதி) மாலை 5.30 மணியளவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழா பேருரையாற்றவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றவும் உள்ளனர்.

அரை நூற்றாண்டு காலத் தமிழ்நாட்டு அரசியலின் மையமாகத் திகழ்ந்தவர், அறுபதாண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தமானவர், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பணியாற்றியவர். அனல் பறக்கும் தம் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர்.

கதை, கவிதை, புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், நாடகம் என தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரைப் பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனிப் பெருந்தலைவராக வலம் வந்தவர் கலைஞர்.

கலைஞர் தமது பொதுவாழ்வில் பெரியார், அண்ணா வளர்த்த உணர்வைப் போற்றி நின்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆற்றியுள்ள தொண்டுகள் ஏராளம். தமிழ் சமுதாயத்தின் உரிமைகளை நிலைநாட்ட அவர் கண்ட களங்கள் ஏராளம். தீண்டாமையின் விளைவாக சமுதாயத்தில் நீடிக்கும் கொடுமைகள் ஒழிக்கப்படவேண்டும் என்றும், சாதி பேத அடிப்படையால் வளரும் சமுதாயக் கேடுகளை களைந்தாக வேண்டும் என்றும், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்படும் நாட்டு மக்கள் நல்வாழ்வு பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், பெண்ணுரிமையும், அவர்கள் வாழ்க்கை நிலையும் உயரும் சூழலை உருவாக்க வேண்டுமென்றும் அயராது பாடுபட்டவர் கலைஞர்.

வாழும் போது வரலாறாகவும், மறைந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ள கலைஞரின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News