உள்ளூர் செய்திகள்
மழை

இடி-மின்னலுடன் கனமழை: புதுவை நகரம் இருளில் மூழ்கியது

Published On 2022-05-27 04:11 GMT   |   Update On 2022-05-27 04:11 GMT
மழை காரணமாக மீண்டும் மின் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் வருவதும், போவதுமாகவே இருந்தது. கிராமப்புற பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த பிப்ரவரி முதல் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது.

மே மாதம் முதல் வாரத்தில் 105 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வெப்ப சலனம், வளிமண்டல சுழற்சியால் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதன்படி நேற்று இரவு 7 மணியளவில் புதுவையில் சிறு தூறலாக தொடங்கிய மழை, படிப்படியாக வேகம் எடுத்தது.

பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல், பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் நகர பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நகரின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நகரமே இருளில் மூழ்கியது.

மழை காரணமாக மீண்டும் மின் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் வருவதும், போவதுமாகவே இருந்தது. கிராமப்புற பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. பாகூரில் 2 தென்னை மரங்கள் மின்னல் தாக்கி தீ பற்றியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பாகூரில் கிராம பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கின.

சில இடங்களில் சிறு, சிறு பனிக்கட்டிகளும் விழுந்தது. இடையார்பாளையம், முருங்கப்பாக்கத்தில் மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் சேதமானது.

லெனின் வீதியில் ஒரு வீட்டிலும், லப்போர்த் வீதியில் ஒரு மரமும் சாய்ந்து விழுந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். இன்று காலை வானம் வெறித்து வெளிச்சமாக இருந்தாலும் வெப்பக்காற்று வீசவில்லை.
Tags:    

Similar News