உள்ளூர் செய்திகள்
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பேட்டி அளித்த காட்சி.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

Published On 2022-05-25 09:56 GMT   |   Update On 2022-05-25 09:56 GMT
மக்களுக்காக தங்களது வரிவருவாயை மத்திய அரசு குறைத்து போல், மாநில அரசும் மக்களுக்காக வரிவருவாயை குறைத்து கொள்வதில் எந்த தவறுமில்லை
கோவை:

கோவை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தேசிய மகளிர் அணி தலைவர்  வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.

அப்போது அவர்  கூறியதாவது:- 

மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து தங்களது வரிவருவாயையும் குறைத்துள்ளது. அதுபோன்று, மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல்  விலையை குறைத்து வரிவருவாயை குறைத்து கொள்ள வேண்டும்.

மக்களுக்காக தங்களது வரிவருவாயை மத்திய அரசு குறைத்து போல், மாநில அரசும் மக்களுக்காக வரிவருவாயை குறைத்து கொள்வதில் எந்த தவறுமில்லை.
 
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதல்வர் பிடிவாதம் பிடித்து வருகிறார்.மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் எந்த நியாயமும் இல்லை .

அதேபோல் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலையை குறைத்துள்ளது. 

ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக கூட்டாச்சி தத்துவம் குறித்து மாநில அரசு தவறாக, பொதுமக்களிடம் பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது.தனிப்பட்ட ஆதாயத்திற்காக மோடி அரசை அவர் எதிர்க்கிறார்.

கொரோனாவால் தொழில் முடங்கினாலும் வரி வருவாயை அதிகரித்து மாநில அரசுக்கு தேவையான நிதியை, மத்திய அரசு வழங்கி வருகிறது.

மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பா.ஜனதா பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது என்பது தமிழகத்தின்  சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளதை காட்டுகிறது. அதேபோல் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல் அதிகரித்து வருகிறது. 

தி.மு.க.வின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும். தற்போது மக்கள் ஏன் தி.மு.க விற்கு வாக்களித்தோம் என்று  நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News